Monday 1 August 2016

டீ. எம். பீ. மஹாதேவன் வழங்கும் பகவான் ரமண சித்தாந்தம்  

பகவான் ஸ்ரீ ரமணருடைய சித்தாந்தம், அத்வைத வேதாந்தத்தைப் போன்று ஆன்ம ஞானத்தைக் குறிக்கோளாகக் கொண்டது. இத்தத்துவத்தின் மையக் கருத்து "நான்" எனும் எண்ணத்தை உள்ளடக்கிய ஆன்மாவின் இயல்பு பற்றியவையே.  "நான்" என்பதன் தாத்பர்யம் வேறுபடுகிறது.  பல்வேறு அம்சங்களைத் தொக்கி நிற்கிறது. ஆனால், இந்த அம்சங்கள் எதுவும் உண்மையில் "நான்" அல்ல. உதாரணமாக, ஜடமான உடலை "நான்" என்கிறோம்.  "நான் பருமன்", "நான் ஒல்லி" என கூறுவது போன்று.  இது தவறான பிரயோகம் என்று கண்டுபிடிக்க வெகுநேரம் ஆகாது. உடல் ஒரு ஜடம்.  'எனது உடல்' என்பதன் மறை பொருளை மஹாமூடன் கூட புரிந்து கொள்வான்.  ஆனால், "நான்" என்பது தவறாக போலி அகந்தையுடன் தன்னை ஒன்றுபடுத்திக் கொண்ட சம்பந்தத்தை தீர்த்து வைப்பது அவ்வளவு எளிதல்ல.  ஏனெனில், இதனை அலசி விவரிக்கும் மனமே அகந்தை தான்.  ஆகவே, இந்தத் தவறான ஒற்றுமையை விலக்கப் பார்ப்பதற்கு அது (மனம்) தனக்குத் தானே மரண தண்டனை விதித்துக் கொள்ள வேண்டும் என்கிற விசித்ர நிலை! இது எவ்வகையிலும் எளிதான கார்யம் அன்று. "நான்" என்கிற முனைப்பை ஞானத் தீயில் அர்பணித்தலே மாபெரும் யாகம் ஆகும். 

அகந்தையை அகற்றி, "நான்" எனும் தூய உணர்வை  நிலை நிறுத்துவது சுலபமல்ல என்று  சொன்னோம். அனால், அது முற்றிலும் இயலாத கார்யம் அல்ல. நம் உறங்கும் அனுபவத்தைப் பற்றிச் சிந்தித்தோமேயானால், இவ்வேறுபாட்டை ஒருவாறு புரிந்து கொள்ள முடியும். தூங்கும்போது நாம் இருந்து வருகிறோம். ஆயினும் "நான்" எனும் முனைப்பு வெளியேறிவிடுகிறது. நானெனும் தனிமையுணர்வு தூக்கத்தில் செயல்படுவதில்லை.  அப்படியிருந்தும் கூட, "நான்" என்கிற பிரஜ்ஞை தூக்கத்திலும் உள்ளது;  அதுவே அகந்தையின்மையையும் அதனைச் சார்ந்த பொருட்கள் இல்லாமற் போய்விட்டதையும் காண்கிறது. இவ்வாறு "நான்" எனும் பிரஜ்ஞை அல்லது உணர்வு இருந்திராவிட்டால், உறக்க நிலையிலிருந்து விழித்தெழுந்த ஒருவர் "எதுமே அறியாமல் மெய் மறந்து சுகமாய்த் தூங்கினேன்" என்று நினைவு கூறக்கூடுமோ? 

அப்படியானால், நம்மிடம் இருவித "நான்"கள்  உள்ளன. ஒன்று, அகந்தை எனும் போலியான "நான்", மற்றொன்று "நான்" ஆகிய தூயப் பிரஜ்ஞை - உண்மையுணர்வு. போலி "நான்" அகந்தையுடன் தன்னை உறுதியாகப் பதிந்துவிட்ட காரணமாகவே  அகந்தையை அதன் முகமூடியின்றி தனித்துக் காணாத தவறிவிடுகிறோம்.  மேலும் நமது அன்றாட அணைத்து அனுபவங்களும் "நான்" எனும் முனைப்பாம் அகந்தையையே மையமாககே கொண்டுள்ளன.  தூக்கம் கலைந்ததும் அகந்தையும் எழுகிறது; அதனோடு இந்த உலகமும் உயிர்த்தெழுகிறது.  அதனாலேதான் "நான்" எனும் முனைப்பு மிக முக்கியமானதும் மறுக்க முடியாததும் போல தோற்றமளிக்கிறது.  

ஆனால் உண்மையில் இது சீட்டு அட்டைகளால் கட்டிய கோட்டையே ஆகும். ஆன்ம விசாரணை துவக்கினோமானால் அக்கோட்டை கலகலத்துக் கலைந்து கரைந்து போவதைக் காணலாம். "நான் யார்" என்கிற  இந்த விசாரணையை மேற்கொள்வதற்கு கூர்ந்த சிந்தனை ஆற்றல் - பொருட் கூறுகளின் புதிர்களை அவிழ்ப்பதற்கு வேண்டிய அறிவைக் காட்டிலும் கூர்மையான அக-முக சிந்தனை தேவை.  ஒருமுகமாக சிந்தனை வாயிலாகவே இந்த உண்மையைக் கண்டுணர முடியும். ("दृश्यते तु अग्र्या बुद्ध्या'). முடிவாக ஞானம் உதிக்கும் முன் இச்சிந்தனையினின்றும் கூட கழன்று விட வேண்டும் என்பது என்னவோ உண்மைதான். ஆயினும் அம்முடிவு நிலை ஏகும் வரை மனம் ஆன்ம விசாரத்தில் ஈடுபட வேண்டும். சோம்பியிருப்போர்க்கு மெய்யறிவு கிட்ட வாய்ப்புண்டோ! 

"நான் யார்?" என்னும் விசாரணை மனதின் தன்மையைப் புரிந்து கொள்வதற்கான சிந்தனை முயற்சி என எண்ணலாகாது. மனம் முழுவதையும் அதன் பிறப்பிடத்தில் நிலைக்கச் செய்வதே இதன் முக்கிய நோக்கம். போலியான "நான்" என்கிற முனைப்புக்கும் "நான்" எனும் தூய உணர்வே மூல காரணம். ஆன்ம விசாரணையில் ஈடுபடும் ஒருவர் செய்வது இதுதான்; சிந்தனை ஓட்டத்தோடு இல்லாமல் எதிர்நீச்சல் போடுகிறார். முடிவில் எண்ண வேறுபாடுகளுக்கப்பால் உள்ள எல்லையைக் கடந்து விடுகிறார். அந்நிலையில் பாசாங்கான "நான்" என்கிற அகந்தையை அதன் பிறப்பிடத்தில் மடக்கினால் அது மறைந்த விடுகிறது. அவ்வதீத நிலையில் "நான்" எனும் தூய உணர்வு பூரணமாய்ப் பிரகாசிக்கிறது.  இந்தப் பிரகாசம் ஞான ஒளி என்றும்  மோக்ஷம் அல்லது விடுதலை   என்றும் கூறப்படுகிறது. 

உடல் இயங்குவதும் அல்லது இயங்காமலிருத்தலும் மோக்ஷ நிலையோடு யாதோரு தொடர்பும் அற்றவை. சரீரம் தொடர்ந்து ஜீவித்திருக்கலாம். உலகமும் கண்முன் நிகழ்ந்த வண்ணம் இருக்கலாம். பகவான் ரமண மஹரிஷியின் உதாரணத்தில் கண்டது போல, தூய உணர்வில் ஒன்றிவிட்டவர்களுக்கு இவை எவ்வித வேறுபாடும் ஏற்படுவதில்லை. அத்தகையோருக்கு உடலும் உலகமும் இருப்பதும் இல்லாமலிருப்பதும் ஒன்றே. 

நம் நிரந்தர உண்மை (सत्) அறிவையே (चित्) பூரண இன்பமாக (आनन्दं) அடைய பெறுவதே புருஷார்த்தம்.  இத்தகைய அனுபவம் நமக்கு முற்றிலும் புதிதல்ல. நாம் உறங்கும்போது வெளியுலகப் பிரஜ்ஞையோ அல்லது கனவுலக நடப்புகளோ அறியாத மனோலயத்தில் இருக்கிறோம். ஆனால் அந்த அனுபவம் அஞ்ஞானம்  அல்லது அறியாமை எனும் திரையினால் மறைக்கப்பட்டிருக்கிறது. ஆகையால்தான் கனவுத் தோற்றங்களையும் விழித்தெழுந்தவுடன் புர உலகத்த தோற்றங்களையும் உணர்கிறோம்.  அஞ்ஞானம்  அகன்றால் தான் மனம் நசித்தால்தான், இந்த இருதலைக் கொள்ளி நிலையை கடந்து நிற்கமுடியும். இதனை சாத்தியமாக்குவதே வேதாந்தத்தின் குறிக்கோள். தாழ்நிலையில் உள்ளவர்களுக்கும் நம்பிக்கை ஊட்டி நம் அனைவரையும் சோர்வுச் சகதியிலிருந்து கைதூக்கிவிட பகவான் ரமணர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்.